கோபம் என்பது ஏதோ தவறு நடந்தாலோ அல்லது யாராவது உங்களுக்குத் தீங்கு அல்லது தவறு செய்தாலோ நீங்கள் உணரும் ஒரு தீவிர உணர்ச்சி ஆகும்.பொதுவாக கோபம் என்பது மனஅழுத்தம், விரக்தி மற்றும் எரிச்சல் போன்றவற்றால் வகைபடுத்தப்படுகிறது. கோபம் என்பது அனைவரும் வெளிக்காட்டக் கூடிய ஒரு சாதாரண மற்றும் ஆரோக்கியமான உணர்வு ஆகும். ஆனால் அக்கோபமானது உங்கள் அன்றாடச் செயல்பாடுகளையும், குடும்பம் மற்றும் மனிதர்களுடன் நீங்கள் பழகும் விதத்தையும் பாதிக்கத் தொடங்கும் போது மட்டுமே அது ஒரு பிரச்சனையாகவும் நோயாகவும் மாறுகிறது.
கோபத்தின் வகைகள்:
A) உறுதியான கோபம் (Assertive Anger):
உறுதியான கோபம் என்பது ஆக்கபூர்வமான கோபத்தின் வெளிப்பாடாகும். கோபத்தின் உணர்வுகளைத் தொடர்பு கொள்வதற்கான சிறந்த வழி இதுவாகும், ஏனெனில் இக்கோபம் நேரடியாகவும், சம்பந்தப்பட்ட நபருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் வெளிப்படுத்த படுகிறது. பயத்தைப் போக்க, பிரச்சனைகளை தீர்க்க மற்றும் வாழ்க்கையில் நாம் விரும்பிய நிலையை அடைய உறுதியான கோபம் பயன்படுகிறது.
B) நடத்தை கோபம்( Behavioral Anger):
நடத்தை கோபம் என்பது நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை உடல்ரீதியாக வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். கோபத்தின் வெளிப்பாட்டின் இந்த வடிவம் உடல் ரீதியானது மற்றும் வன்முறையானதாக இருக்கக்கூடும். இக்கோபம் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்ட நடத்தை ஆகும். இக்கோபத்தில் நாம் பொருட்களை உடைப்பது அல்லது தூக்கி எறிவது அல்லது யாரையாவது உடல் ரீதியாக துன்புறுத்துவது அல்லது தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இக்கோபத்தை ஒருவர் தணிக்க விரும்பினால் அவர் நடை அல்லது ஓடுதல் பயிற்சியில் ஈடுபடலாம்.
C)நாள்பட்ட கோபம்(Chronic anger):
நாள்பட்ட கோபம் என்பது கோபத்தின் மற்ற வடிவங்களைப் போலல்லாமல், நாள்பட்ட கோபத்தின் உணர்வுகள் நீண்ட காலமாக இருக்கும் மற்றும் பெரும்பாலும் அவை காலங்கள் ஓடினாலும் அக்கோபமானது குறையாது.உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், தலைவலி, தோல் கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு நாள்பட்ட கோபமே காரணமாகிறது. (உ.தா) காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகளின் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் கோபம். நாள்பட்ட கோபத்தில் இருந்து வெளிவர கடந்த கால நிகழ்வுகளை மறப்பதும்,மன்னிப்பதும் மட்டுமே ஒரே வழியாகும்.
D) நியாயமான கோபம்(judgemental Anger):
E) அதீத கோபம் (Overwhelmed anger):
அதீத கோபம் ஒரு கட்டுப்பாடு அற்ற கோபம் ஆகும். இக்கோபமானது நாம் அதிக பொறுப்பை ஏற்கும்போது அல்லது எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறனை இழக்கும் போது இந்த வகையான கோபம் ஏற்படுகிறது. ஒரு சூழ்நிலை நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்று நாம் உணரும்போது இது பொதுவாக நிகழ்கிறது, இதன் விளைவாக நம்பிக்கையின்மை மற்றும் விரக்தி உணர்வு ஏற்படுகிறது.
F) செயலற்ற-ஆக்கிரமிப்பு கோபம்(Passive-aggressive anger):
செயலற்ற-ஆக்கிரமிப்பு கோபம் என்பது ஒரு தவிர்க்கும் வகையான கோபத்தின் வெளிப்பாடு ஆகும். இக்கோபத்தை நாம் கிண்டல் செய்வது,பேசுவதை தவிர்ப்பது, திட்டுவது போன்ற வழிகளில் வெளிப்படுத்துவோம். இக்கோபத்தின் நோக்கமானது பெரும்பாலும் மோதல்களை தவிர்ப்பதே ஆகும்.
G) பழிவாங்கும் கோபம்(Retaliatory anger):
பழிவாங்கும் கோபம் என்பது மற்றொருவர் நமக்கு செய்த ஒரு தவறான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு எதிர்வினையாக தூண்டப்படும் கோபம் ஆகும். இது கோபத்தின் பொதுவான வகை ஆகும்.
H) தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் கோபம்( Self-abusive Anger):
இக்கோபமானது பெரும்பாலும் அவமானம் சார்ந்தது ஆகும்.நாம் நம்பிக்கையற்றவராக, தகுதியற்றவராக அல்லது அவமானப்படுத்தப்பட்டவராக உணரும் நேரங்களில் இக்கோபம் வெளிப்படும். பெரும்பாலும் இக்கோபத்தை நாம் எதிர்மறையாக தனக்குத்தானே பேசிக் கொள்வது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் சரியாக உணவு உட்கொள்ளாமல் இருப்பது போன்ற வகைகளில் வெளிப்படுத்துவோம்.
I) வாய்மொழி கோபம்(Verbal anger):
வாய்மொழி கோபம் என்பது நடத்தை ரீதியான கோபத்தை விட ஆபத்து குறைந்தது ஆகும். ஆனால் இக்கோபமானது நம் எதிரியின் உளவியல் மற்றும் உணர்ச்சிகளில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். வாய்மொழி ரீதியான கோபத்தை நாம் ஆவேசமாக கூச்சலிடுவது, அச்சுறுத்துவது, கேலி மற்றும் கிண்டல் செய்வது,கடுமையாக குற்றம் சாட்டுவது அல்லது விமர்சனம் செய்வது போன்ற முறைகளில் வெளிப்படுத்துவோம்.
J) நிலையற்ற கோபம்(Volatile anger):
நிலையற்ற கோபம் பொதுவாக போதைப் பழக்கம் உடைய ஆண்களுக்கு காணப்படும். இந்த வகையான கோபம் திடீரென உதித்து மறையும் தன்மை உடையது. இவ்வகைக் கோபம் உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் திறனை பாதிக்கிறது. சில நேரங்களில் நிலையற்ற கோபமானது வன்முறை நடத்தைக்கு வழிவகுக்கும்.
அறிகுறிகள்:
நாம் கோபமாக இருக்கும்போது நம் உடல் சில உயிரியல் மற்றும் உடலியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது.
# அதீத வேகம் மற்றும் அதிகரித்த ஆற்றல் நிலைகள்,
# இரத்த அழுத்தம் அதிகரித்தல்,
# அட்ரினலின் மற்றும் நோராட்ரீனலின் போன்ற ஹார்மோன்களின் அதிகரிப்பு,
# உடல் வெப்பநிலை அதிகரிப்பு,
# அதிகரித்த தசை பதற்றம்,
# சத்தமாக பேசுவது,
# முகம் சுளித்தல் அல்லது சுருங்குதல்,
# உடல் நடுக்கம்,
# விரைவான இதயத் துடிப்புகள்,
# அதிகமாக வியர்த்தல்,
# ஓய்வு அற்ற உடல்நிலை.
# கண்கள் சிவந்த நிலை,
நம் கோபம் சாதாரணமாக இல்லை என்பதற்கான சில அறிகுறிகள் (Severe Symptoms):
# நம் உறவுகளையும் சமூக வாழ்க்கையையும் பாதிக்கும் கோபம்,
# நம் கோபத்தை மறைக்க வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என்ற உணர்வு,
# நிலையான எதிர்மறை சிந்தனை மற்றும் எதிர்மறை அனுபவங்களை பற்றிய சிந்தனை,
# பொறுமையின்மை, எரிச்சல் மற்றும் விரோத உணர்வு தொடர்ந்து இருத்தல்,
# மற்றவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்தல்,
# நீங்கள் கோபமாக இருக்கும்போது உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவது,
# நம் கோபத்தை கட்டுப்படுத்த இயலாமல் பொருட்கள் மற்றும் மற்றவர்களை காயப்படுத்துதல்.
# நம் கோபத்தை பற்றிய கவலை.
காரணங்கள்:
ஒரு நபர் அல்லது ஒரு நிகழ்வு உங்கள் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்.கோபம் பெரும்பாலும் தூண்டுதலால் ஏற்படுகிறது,நாம் உணர்ச்சி ரீதியாக புண்படுத்தப்படும்போது அல்லது அச்சுறுத்தப்படும்போது, வலியில் அல்லது மோதலில் இருக்கும்போது நாம் கோபமாக உணரலாம்.
கோபத்தை ஏற்படுத்தும் சில பொதுவான தூண்டுதல்கள் பின்வருமாறு:
# மன அழுத்தம்,
# நிதி நெருக்கடி,
# ஒரு வேலை அல்லது பணியில் தோல்வி,
# சோர்வாக இருப்பது,
# நேசிப்பவரின் இழப்பு மற்றும் பிரிவு,
# வேலையில் பதவி உயர்வைத் தவறவிடுவது அல்லது உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற தனிப்பட்ட பிரச்சனைகள்,
# மோசமான போக்குவரத்து அல்லது கார் விபத்தில் சிக்குவது போன்ற நிகழ்வு,
# ஒரு அதிர்ச்சிகரமான அல்லது ஆத்திரமூட்டும் நிகழ்வின் நினைவுகள்,
# ஹார்மோன் மாற்றங்கள் கோபத்தை ஏற்படுத்தும்.
விளைவுகள்:
கோபம் என்பது முற்றிலும் இயல்பான மற்றும் பொதுவாக ஆரோக்கியமான உணர்ச்சி ஆகும். இருப்பினும், நாம் கட்டுப்பாட்டை இழக்கும்போது அது நம் உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக நாம் 10 வினாடிகள் கோபப்பட்டால் நம் உடலானது அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர 8மணி நேரம் ஆகும்.
# உயர் ரத்த அழுத்தம்
# மனச்சோர்வு
# பதற்றம்
# தூக்கமின்மை
# போதைப்பொருள் பயன்பாடு
# வயிற்றுப்புண்
# சர்க்கரை நோய்
# விபத்துகளில் சிக்குவது
# தனிமை உணர்வு
# தற்கொலை எண்ணம்
# உறவுகளை இழத்தல்
# தலைவலி
# இதயக் கோளாறுகள்
# மன அழுத்தம்
# செயல் திறன் குறைபாடு
# உடற்சோர்வு
கோபத்தை கையாளும் முறைகள்:
# ஆழமாக மூச்சை இழுத்து விடுதல்,
# உடற்பயிற்சி
# சூழ்நிலையில் இருந்து விலகிச் செல்லுதல்,
# கோபத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்தல்,
# உங்களுக்கு கோபம் வரும்போது அதனை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதுதல்,
# உங்களுக்கு பிடித்த நகைச்சுவையை பார்த்து சிரித்தல்,
# கோபத்தில் இருக்கும்போது நன்கு யோசித்து பேசுதல்,
# கோபத்தை தூண்டக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதை கற்பனை செய்து பார்தல்,
# உணர்வுகளைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்,
# புத்தகங்களை வாசித்தல்,
# தனக்குத்தானே சிறிய உற்சாக உரையை(like_ take it easy) சொல்லிக் கொள்ளுதல்.
மேலே கூறப்பட்ட முறைகளில் ஒருவரின் கோபம் குறையவில்லை என்றால் மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை அல்லது மாத்திரைகள் பெற்றுக்கொள்வது சிறந்தது.
நன்றி..🖤
By.Iniyan Tharmaraj.,B.B.A.,MSW(MPSW)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக