Translate

வியாழன், 26 மே, 2022

Depression..?

மனச்சோர்வு என்றால் என்ன.?
        நாம் அனைவரும் சில நேரங்களில் கவலை மற்றும் தாழ்வு மனப்பான்மையை உணர்ந்திருக்கலாம் ஆனால் இந்த உணர்வுகள் பொதுவாக சிறிது நேரத்தில் குறையத் தொடங்கிவிடும். ஆனால் மனச்சோர்வுக் கோளாறு (Depressive Disorder) என்பது நமது உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் நடத்தையைப் பாதிக்கும் ஒரு பொதுவான மற்றும் தீவிரமான மருத்துவ நிலையாகும். இது ஒரு தொடர்ச்சியான கவலை மற்றும் ஆர்வத்தை இழப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது மேலும் இது பலவிதமான உணர்ச்சி மற்றும் உடல் பிணிகளுக்கு வழிவகுக்கிறது. மனசோர்வு நிலை என்பது நம் அன்றாட செயல்களை செய்வதில் நமக்கு சிக்கல்களை ஏற்படுத்தும், மேலும் சில நேரங்களில் நாம் வாழ்வதற்கு தகுதியற்றவர் போல் நினைக்கத் தூண்டும்.

அறிகுறிகள்:
தொடர்ந்த கவலை,வெறுமை அல்லது தன்னம்பிக்கை இன்மை போன்ற உணர்வுகள்,
 சிறிய விசயத்திற்கு கூட கோபப்படுவது, எரிச்சல் அடைவது,
 அன்றாட செயல்பாடுகளில் ஆர்வமின்மை மற்றும் அக்கறையின்மை,
 தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம்,
 உடற்சோர்வு மற்றும் உடலில் சக்தியின்மை போன்ற உணர்வுகள்,
 அதீத தனிமை உணர்வு,
 பசியின்மை,
✓ உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல்,
 பயம்,ஓய்வின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகள்,
 மெதுவான சிந்தனை மற்றும் பேச்சு,
 ஒரே விசயத்தை யோசித்துக் கொண்டே இருப்பது,
 குற்ற உணர்வு‌ மற்றும் தன்னைத் தானே குறை கூறிக்கொள்வது,
 அதீத போதைப் பொருட்களின் பயன்பாடு,
 சிந்தனை, கவனம் செலுத்துதல், முடிவுகளை எடுப்பது மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும்,
தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது,
 முதுகுவலி அல்லது தலைவலி போன்ற விவரிக்க முடியாத உடல் பிரச்சினைகள்,
 தொடர்ந்த தற்கொலை எண்ணம் அல்லது தற்கொலைக்கு முயற்சிப்பது அல்லது தற்கொலை செய்து கொள்வது.

காரணங்கள்:
மரபணு காரணிகள்,
மூளையில் சுரக்கக்கூடிய இரசாயனங்களின் ஏற்றத்தாழ்வு,
போதைப்பொருள் பயன்பாடு,
மனஅழுத்தம் நிறைந்த சுற்றுச்சூழல்,
ஏமாற்றம் மற்றும் இழப்பு,
சத்துக் குறைபாடு,
உடல்நல குறைபாடு,

சிகிச்சை முறை:

உளவியல் சிகிச்சை (psycho therapy)
மருந்துகள் ( Medication)
மின் அதிர்வு சிகிச்சை (Electro-convulsive therapy)
உடற்பயிற்சி மற்றும் தியானம் (Exercise and Yoga)

ஒரு நபர் மனச்சோர்வில் இருக்கும் போது செய்ய வேண்டியவை:
1. மன அழுத்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 
2.அதிக நேரத்தை நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் செலவிட வேண்டும்,
3. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்,
4.போதுமான அளவு தூக்கம் வேண்டும்,
5.உங்களுக்கு பிடித்த மற்றும் சந்தோஷத்தை தரக்கூடிய விசயங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்,
6. உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்ய வேண்டும்,
7. பயணம் மேற்கொள்ள வேண்டும்,
8. உங்கள் பிரச்சனையை பற்றி நம்பிக்கை உடையவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்,
9. உற்சாகத்தைத் தரக்கூடிய இசையை கேட்க வேண்டும்,
10. அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மன நல மருத்துவரை சந்திக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை:
1. தனிமையில் வீட்டிற்கு உள்ளேயே இருக்க கூடாது,
2. மற்றவர்களுடன் மனம் விட்டு பேசாமல் இருக்கக்கூடாது,
3. அதீத சிந்தனை செய்யக்கூடாது,
4. போதைப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது,
5. தன்னைத்தானே குறை கூறக்கூடாது,
6. போதுமான அளவு தூங்காமல் மற்றும் உணவு அருந்தாமல் இருக்கக்கூடாது,
7. சோகமான பாடல்களை கேட்கக்கூடாது,
8. உங்கள் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது,
9. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க கூடாது,
10, மனநல மருத்துவரை சந்திக்காமல் இருக்க கூடாது.

Emergency care: எந்த ஒரு நபர் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துகிறாரோ அவருக்கு அவசர உதவி தேவை.

நன்றி.🖤
By.Iniyan Tharmaraj.BBA.,MSW(MPSW)

வெள்ளி, 13 மே, 2022

Anger..?

கோபம் என்றால் என்ன?

             கோபம் என்பது ஏதோ தவறு நடந்தாலோ அல்லது யாராவது உங்களுக்குத் தீங்கு அல்லது தவறு செய்தாலோ நீங்கள் உணரும் ஒரு தீவிர உணர்ச்சி ஆகும்.பொதுவாக கோபம் என்பது மனஅழுத்தம், விரக்தி மற்றும் எரிச்சல் போன்றவற்றால் வகைபடுத்தப்படுகிறது. கோபம் என்பது அனைவரும் வெளிக்காட்டக் கூடிய ஒரு சாதாரண மற்றும் ஆரோக்கியமான உணர்வு ஆகும். ஆனால் அக்கோபமானது உங்கள் அன்றாடச் செயல்பாடுகளையும், குடும்பம் மற்றும் மனிதர்களுடன் நீங்கள் பழகும் விதத்தையும் பாதிக்கத் தொடங்கும் போது மட்டுமே அது ஒரு  பிரச்சனையாகவும் நோயாகவும் மாறுகிறது.

கோபத்தின் வகைகள்:
A) உறுதியான கோபம் (Assertive Anger):
   உறுதியான கோபம் என்பது ஆக்கபூர்வமான  கோபத்தின்  வெளிப்பாடாகும். கோபத்தின் உணர்வுகளைத் தொடர்பு கொள்வதற்கான சிறந்த வழி இதுவாகும், ஏனெனில் இக்கோபம் நேரடியாகவும், சம்பந்தப்பட்ட நபருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் வெளிப்படுத்த படுகிறது. பயத்தைப் போக்க, பிரச்சனைகளை தீர்க்க மற்றும் வாழ்க்கையில் நாம் விரும்பிய நிலையை அடைய உறுதியான கோபம் பயன்படுகிறது.
B) நடத்தை கோபம்( Behavioral Anger):
   நடத்தை கோபம் என்பது நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை உடல்ரீதியாக வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். கோபத்தின் வெளிப்பாட்டின் இந்த வடிவம் உடல் ரீதியானது மற்றும் வன்முறையானதாக இருக்கக்கூடும். இக்கோபம் பிறருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தைக் கொண்ட நடத்தை ஆகும். இக்கோபத்தில் நாம் பொருட்களை உடைப்பது அல்லது தூக்கி எறிவது அல்லது யாரையாவது உடல் ரீதியாக துன்புறுத்துவது அல்லது தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இக்கோபத்தை ஒருவர் தணிக்க விரும்பினால் அவர் நடை அல்லது ஓடுதல் பயிற்சியில் ஈடுபடலாம்.
C)நாள்பட்ட கோபம்(Chronic anger):
   நாள்பட்ட கோபம் என்பது கோபத்தின் மற்ற வடிவங்களைப் போலல்லாமல், நாள்பட்ட கோபத்தின் உணர்வுகள் நீண்ட காலமாக இருக்கும் மற்றும் பெரும்பாலும் அவை காலங்கள் ஓடினாலும் அக்கோபமானது குறையாது.உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், தலைவலி, தோல் கோளாறுகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு நாள்பட்ட கோபமே காரணமாகிறது. (உ.தா) காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகளின் மீது பெற்றோர்களுக்கு இருக்கும் கோபம். நாள்பட்ட கோபத்தில் இருந்து வெளிவர கடந்த கால நிகழ்வுகளை மறப்பதும்,மன்னிப்பதும் மட்டுமே ஒரே வழியாகும்.
D) நியாயமான கோபம்(judgemental Anger):
  நியாயமான கோபம் என்பது நமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ நடக்கும் அநீதிகளை கண்டு ஏற்படும் கோபம் ஆகும்.
E) அதீத கோபம் (Overwhelmed anger):
   அதீத கோபம் ஒரு கட்டுப்பாடு அற்ற கோபம் ஆகும். இக்கோபமானது நாம் அதிக பொறுப்பை ஏற்கும்போது அல்லது எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் மன அழுத்தத்தைச் சமாளிக்கும் திறனை இழக்கும் போது இந்த வகையான கோபம் ஏற்படுகிறது. ஒரு சூழ்நிலை நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்று நாம் உணரும்போது இது பொதுவாக நிகழ்கிறது, இதன் விளைவாக நம்பிக்கையின்மை மற்றும் விரக்தி உணர்வு ஏற்படுகிறது.
F) செயலற்ற-ஆக்கிரமிப்பு கோபம்(Passive-aggressive anger):
  செயலற்ற-ஆக்கிரமிப்பு கோபம் என்பது ஒரு தவிர்க்கும் வகையான கோபத்தின் வெளிப்பாடு ஆகும். இக்கோபத்தை நாம் கிண்டல் செய்வது,பேசுவதை தவிர்ப்பது, திட்டுவது போன்ற வழிகளில் வெளிப்படுத்துவோம். இக்கோபத்தின் நோக்கமானது பெரும்பாலும் மோதல்களை தவிர்ப்பதே ஆகும்.
G) பழிவாங்கும் கோபம்(Retaliatory anger):
   பழிவாங்கும் கோபம் என்பது மற்றொருவர் நமக்கு செய்த ஒரு தவறான செயலுக்கு அல்லது துரோகத்திற்கு எதிர்வினையாக தூண்டப்படும் கோபம் ஆகும். இது கோபத்தின் பொதுவான வகை ஆகும்.
H) தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் கோபம்( Self-abusive Anger):
   இக்கோபமானது பெரும்பாலும் அவமானம் சார்ந்தது ஆகும்.நாம் நம்பிக்கையற்றவராக, தகுதியற்றவராக அல்லது  அவமானப்படுத்தப்பட்டவராக உணரும் நேரங்களில் இக்கோபம் வெளிப்படும். பெரும்பாலும் இக்கோபத்தை நாம் எதிர்மறையாக தனக்குத்தானே பேசிக் கொள்வது, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் சரியாக உணவு உட்கொள்ளாமல் இருப்பது போன்ற வகைகளில் வெளிப்படுத்துவோம்.
 I) வாய்மொழி கோபம்(Verbal anger):
   வாய்மொழி கோபம் என்பது நடத்தை ரீதியான கோபத்தை விட ஆபத்து குறைந்தது ஆகும். ஆனால் இக்கோபமானது நம் எதிரியின் உளவியல் மற்றும் உணர்ச்சிகளில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். வாய்மொழி ரீதியான கோபத்தை நாம் ஆவேசமாக கூச்சலிடுவது, அச்சுறுத்துவது, கேலி மற்றும் கிண்டல் செய்வது,கடுமையாக குற்றம் சாட்டுவது அல்லது விமர்சனம் செய்வது போன்ற முறைகளில் வெளிப்படுத்துவோம்.
J) நிலையற்ற கோபம்(Volatile anger):
    நிலையற்ற கோபம் பொதுவாக போதைப் பழக்கம் உடைய ஆண்களுக்கு காணப்படும். இந்த வகையான கோபம் திடீரென உதித்து மறையும் தன்மை உடையது. இவ்வகைக் கோபம் உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் திறனை பாதிக்கிறது. சில நேரங்களில் நிலையற்ற கோபமானது வன்முறை நடத்தைக்கு வழிவகுக்கும்.

அறிகுறிகள்:
      நாம் கோபமாக இருக்கும்போது நம் உடல் சில உயிரியல் மற்றும் உடலியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. 
நம் உடலில் ஏற்படக்கூடிய சாதாரண அறிகுறிகள்:
# அதீத வேகம் மற்றும் அதிகரித்த ஆற்றல் நிலைகள்,
# இரத்த அழுத்தம் அதிகரித்தல்,
# அட்ரினலின் மற்றும் நோராட்ரீனலின் போன்ற ஹார்மோன்களின் அதிகரிப்பு,
# உடல் வெப்பநிலை அதிகரிப்பு,
# அதிகரித்த தசை பதற்றம்,
# சத்தமாக பேசுவது,
# முகம் சுளித்தல் அல்லது சுருங்குதல்,
# உடல் நடுக்கம்,
# விரைவான இதயத் துடிப்புகள்,
# அதிகமாக வியர்த்தல்,
# ஓய்வு அற்ற உடல்நிலை.
# கண்கள் சிவந்த நிலை,

நம் கோபம் சாதாரணமாக இல்லை என்பதற்கான சில அறிகுறிகள் (Severe Symptoms):
# நம் உறவுகளையும் சமூக வாழ்க்கையையும் பாதிக்கும் கோபம்,
# நம் கோபத்தை மறைக்க வேண்டும் அல்லது அடக்க வேண்டும் என்ற உணர்வு,
# நிலையான எதிர்மறை சிந்தனை மற்றும் எதிர்மறை அனுபவங்களை பற்றிய சிந்தனை,
# பொறுமையின்மை, எரிச்சல் மற்றும் விரோத உணர்வு தொடர்ந்து இருத்தல்,
# மற்றவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்தல்,
# நீங்கள் கோபமாக இருக்கும்போது உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவது,
# நம் கோபத்தை கட்டுப்படுத்த இயலாமல் பொருட்கள் மற்றும் மற்றவர்களை காயப்படுத்துதல்.
# நம் கோபத்தை பற்றிய கவலை.

காரணங்கள்:

               ஒரு நபர் அல்லது ஒரு நிகழ்வு உங்கள் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம்.கோபம் பெரும்பாலும் தூண்டுதலால் ஏற்படுகிறது,நாம் உணர்ச்சி ரீதியாக புண்படுத்தப்படும்போது அல்லது அச்சுறுத்தப்படும்போது, வலியில் அல்லது மோதலில் இருக்கும்போது நாம் கோபமாக உணரலாம்.
கோபத்தை ஏற்படுத்தும் சில பொதுவான தூண்டுதல்கள் பின்வருமாறு: 
# மன அழுத்தம்,
நிதி நெருக்கடி,
ஒரு வேலை அல்லது பணியில் தோல்வி,
சோர்வாக இருப்பது,
நேசிப்பவரின் இழப்பு மற்றும் பிரிவு,
வேலையில் பதவி உயர்வைத் தவறவிடுவது அல்லது உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற தனிப்பட்ட பிரச்சனைகள்,
மோசமான போக்குவரத்து அல்லது கார் விபத்தில் சிக்குவது போன்ற நிகழ்வு,
ஒரு அதிர்ச்சிகரமான அல்லது ஆத்திரமூட்டும் நிகழ்வின் நினைவுகள்,
ஹார்மோன் மாற்றங்கள் கோபத்தை ஏற்படுத்தும்.

விளைவுகள்:
   கோபம் என்பது முற்றிலும் இயல்பான மற்றும் பொதுவாக ஆரோக்கியமான உணர்ச்சி ஆகும். இருப்பினும், நாம் கட்டுப்பாட்டை இழக்கும்போது அது நம் உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக நாம் 10 வினாடிகள் கோபப்பட்டால் நம் உடலானது அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர 8மணி நேரம் ஆகும்.
# உயர் ரத்த அழுத்தம்
# மனச்சோர்வு
# பதற்றம்
# தூக்கமின்மை
# போதைப்பொருள் பயன்பாடு
# வயிற்றுப்புண்
# சர்க்கரை நோய்
# விபத்துகளில் சிக்குவது
# தனிமை உணர்வு
# தற்கொலை எண்ணம்
# உறவுகளை இழத்தல்
# தலைவலி
# இதயக் கோளாறுகள்
# மன அழுத்தம்
# செயல் திறன் குறைபாடு
# உடற்சோர்வு

கோபத்தை கையாளும் முறைகள்:
ஆழமாக மூச்சை இழுத்து விடுதல்,
# உடற்பயிற்சி
# சூழ்நிலையில் இருந்து விலகிச் செல்லுதல்,
# கோபத்திற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரி செய்தல்,
# உங்களுக்கு கோபம் வரும்போது அதனை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதுதல்,
உங்களுக்கு பிடித்த நகைச்சுவையை பார்த்து சிரித்தல்,
# கோபத்தில் இருக்கும்போது நன்கு யோசித்து பேசுதல்,
கோபத்தை தூண்டக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதை கற்பனை செய்து பார்தல்,
# உணர்வுகளைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்,
# புத்தகங்களை வாசித்தல்,
தனக்குத்தானே சிறிய உற்சாக உரையை(like_ take it easy) சொல்லிக் கொள்ளுதல்.
        மேலே கூறப்பட்ட முறைகளில் ஒருவரின் கோபம் குறையவில்லை என்றால் மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை அல்லது மாத்திரைகள் பெற்றுக்கொள்வது சிறந்தது.



நன்றி..🖤
By.Iniyan Tharmaraj.,B.B.A.,MSW(MPSW)

Mania.?

மேனியா (Mania):      மேனியா(Mania) அல்லது பித்து என்பது ஒருவரை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதீத ஆற்றல் உள்ளவராக உணர வைக்கும் ...